முன்னணி கன்சல்டிங் நிறுவனம் அக்சென்ச்சர், கடந்த மூன்று மாதங்களில் உலகளாவிய அளவில் 11,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) விரைவான வளர்ச்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து குறைந்த பணித் தேவைகள் இதற்கான முக்கிய காரணங்களாகும். இந்த பணிநீக்கங்கள் 865 மில்லியன் டாலர் மதிப்புள்ள மறுகட்டமைப்பு திட்டத்தின் பகுதியாகும், மேலும் வரும் மாதங்களில் கூடுதல் வெளியேற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக நிறுவனம் எச்சரித்துள்ளது.

அக்சென்ச்சர் தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் கூறியதன்படி, நிறுவனத்தின் தற்போதைய தேவைகளுக்கேற்ப, சில ஊழியர்களுக்கு தேவையான திறன்களை விரைவாக பயிற்சி அளிக்க முடியாததால் அவர்களை குறுகிய காலத்துக்குள் வெளியேற்றுகிறோம். செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளுக்கான வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஊழியர்களை வேகமாக மாற்றுவது இந்த நடவடிக்கையின் நோக்கம். இதனால் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள முடியாத ஊழியர்கள் கூட எதிர்காலத்தில் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தப் பணிநீக்கம் நடவடிக்கையின் போது, அக்சென்சர் உலகளாவிய மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 7,79,000 ஆக குறைந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த 7,91,000 ஊழியர்கள் எண்ணிக்கையைவிட இது குறைவாகும். இந்த மறுகட்டமைப்பு முயற்சி நவம்பர் 2025 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட சேமிப்பு கிடைக்கும் எனவும், தற்போதைய பணிநீக்கம் அதற்கேற்ப செலவுகள் குறைக்க வழிவகுக்கும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணிநீக்க நடவடிக்கைகளுக்கிடையிலும், அக்சென்ச்சர் தனது ஊழியர்களுக்கு புதிய திறன்களை மேம்படுத்தும் பயிற்சியை வழங்கி வருகிறது. Agentic Artificial Intelligence (AAI) போன்ற AI கருவிகளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திறன்களை ஊழியர்கள் பெறுவார்கள். AI வளர்ச்சியால் தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய திறன் மேம்பாடு அவசியம் என்பதையும், வேலை மாற்றங்கள் மற்றும் திறன் அப்டேட்டுகள் நிறுவன வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை ஜூலி ஸ்வீட் வலியுறுத்தினார்.