பொள்ளாச்சி: ஈரான் போரால் கப்பல் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் பொள்ளாச்சியில் ரூ.100 கோடி மதிப்பில் தென்னை நார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் தொழில் பிரதானமாக உள்ளது. தென்னை மட்டையில் இருந்து நார் துகள்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் 60 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகளும், தமிழகத்தில் 12 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சியில் உள்ள ஆலைகளில் உற்பத்தியாகும் தென்னை நார் துகள் மற்றும் நார்கள் சென்னை, தூத்துக்குடி, கொச்சி போன்ற துறைமுகங்களுக்கு கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் மதிப்பு கூட்டுப் பொருட்களாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஈரான்-இஸ்ரேல், அமெரிக்க இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனால் ஈரான் தனது கடல் எல்லையை மூடி விட்டதால் வர்த்தக கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி மற்றும் கேரளத்தின் கொச்சி துறைமுகங்களில் தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி கிடப்பதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய போரால் ஈரான் தனது கடல் எல்லையை மூடியதால் வெளிநாடுகளுக்கு தென்னை நார் பொருட்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ரூ.100 கோடிக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்கள் போர் நீடித்தால் ரூ.1000 கோடி வரை தென்னை நார் மற்றும் நார் துகள் ஏற்றுமதி பாதிக்க வாய்ப்புள்ளது.