வேளாண் பருவம் தொடங்குவதையொட்டி, பயிர்க் கடனுக்கு தடையின்றி உதவ கூட்டுறவுத்துறை முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இனி, கூட்டுறவு வங்கிகள் பயிர் கடன் வழங்கும் போது சிபில் ஸ்கோர் கோர வேண்டிய அவசியமில்லை என்பது விவசாயிகளுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு பதிவாளர் நந்தகுமார் எழுதியுள்ள உத்தரவில், சிபில் அறிக்கையை பயன்படுத்துவது, கடந்த ஆண்டுகளில் வட்டி மானியம் செலுத்தாமல் இருந்த விவசாயிகள் தொடர்பான சந்தேக நிலைகளை உறுதி செய்வதற்காக மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த விவசாயிகள் ஏற்கனவே வேறு வங்கிகளில் பயிர் கடன் பெற்றிருந்தால் அதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.
மற்ற விவசாயிகள், வழமையான முறையில் வணிக வங்கியிடமிருந்து தடையில்லா சான்றை பெற்றுக்கொண்டு பயிர் மற்றும் கால்நடை கடன்களைப் பெற முடியும். இவர்களிடம் சிபில் ரிப்போர்ட் கோரப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் முக்கூட்டு ஒப்பந்தம் செய்து, கால்நடை கடன்கள் வழங்கப்படும். இதற்காக, கடன் விண்ணப்பதாரரும் சங்க செயலாளரும் கால்நடையுடன் எடுத்த புகைப்படம், கடன் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.