அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் ஆலன் என்பவர், 36 வயதான ரியல்டர் மற்றும் கன்டென்ட் கிரியேட்டராக இருக்கிறார். சிறுவயதிலிருந்தே நிதி பற்றிய கல்வி இல்லாததாலும், செலவுகளை திட்டமிட்டு நிர்வகிக்கத் தெரியாததாலும், பெரும்பாலும் பணச்சிக்கலில் சிக்கிக்கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். எவ்வளவு கடுமையாக வேலை செய்தாலும், அதிகபட்சமாக கடன் மட்டுமே திரட்ட முடிந்ததாகவும், குழந்தை பிறந்த பிறகு அந்த சுமை மேலும் மோசமாகியதாகவும் அவர் தெரிவிக்கிறார். வாழ்க்கையின் அடிப்படை செலவுகளுக்காகவே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வந்ததாலே $23,000 (தோராயமாக ரூ.19.69 லட்சம்) வரை கடன் சேர்ந்து விட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், ChatGPT-ஐ பயனாக்கி ஒரு தீர்வு காண முடியும் என நம்பிய ஜெனிபர், ஒரு 30 நாள் நிதி சவாலை தொடங்கினார். அந்த சவாலை வழிகாட்டிய AI, தினசரி பணம் சம்பாதிக்கவும், செலவுகளை கட்டுப்படுத்தவும் சிறிய பயனுள்ள டாஸ்க்குகளை பரிந்துரை செய்தது. ஒரு டாஸ்க்கில், அவர் மறந்துபோன வங்கி கணக்குகள், வருமானம் மற்றும் ஃபைனான்ஸ் ஆப்புகளை ஆய்வு செய்து $10,000 (8.5 லட்ச ரூபாய்) மீட்டெடுத்தார். முழு சவாலை முடிக்கும்போது $12,078 (10.3 லட்ச ரூபாய்) கடனைச் செலுத்தியிருந்தார். இது அவரது கடனின் பாதியை அடைக்கும் அளவுக்கு இருந்தது.
தற்போது மீதமுள்ள தொகையை அடுத்த 30 நாட்களில் அடைப்பதற்கான மற்றொரு திட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். “இது ஒரு பெரிய ஹேக் அல்ல; ஆனால் ஒவ்வொரு நாளும் கடனுடன் நேரடியாக சிக்கிக்கொண்டு அதை கண்காணிப்பது, பேசுவது, சமாளிப்பது ஒரு வளர்ச்சி பயணமாக அமைந்தது,” என அவர் கூறுகிறார். இப்போது கடனைப் பற்றிய பயம் இல்லாமல் வாழ்கிறேன்; என் வாழ்க்கையில் நான் உண்மையாக ஏதாவது சாதித்ததாக உணர்கிறேன்,” என்று அவர் உணர்ச்சிகரமாக பகிர்ந்துள்ளார்.
அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் ஒரு ஆழ்ந்த ஆலோசனையை அவர் வழங்குகிறார் – “பதில்கள் எல்லாம் தெரிந்துவிட்ட பிறகு துவங்க வேண்டும் என யோசிக்க வேண்டாம். நீங்கள் தயார் என்று நினைக்கும் முன்பே துவங்கி விடுங்கள்.” AI மூலம் தன்னைத்தானே வழிநடத்திக் கொண்ட ஜெனிபர் ஆலன், நிதி ஒழுங்குமுறையின் வழியாக வாழ்க்கையை மீட்டெடுத்துள்ளார் என்பது உறுதி.