அமெரிக்கா: அமெரிக்க அரசிய் வரி உயர்வால். இந்தியாவை நோக்கி நைக், அடிடாஸ் நிறுவனங்கள் தங்கள் பார்வையை திருப்பியுள்ளன.
உலகம் முழுவதும் பெயர்போன காலணி நிறுவனங்களான நைக், அடிடாஸ், பூமா போன்றவை தங்களின் உற்பத்தி மையங்களை இந்தியாவிற்கு மாற்றும் திட்டங்களை வேகமாக முன்னெடுத்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரி கட்டண உயர்வுகள் கருதப்படுகிறது.
அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், பெரும் நுகர்வோர் பங்களிப்புடன் விளங்குகிறது. இங்கு தற்போது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காலணிகள் மீது அதிக வரி கட்டணங்களை விதிப்பதன் மூலம் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கின்றது.
இதன் விளைவாக நைக், அடிடாஸ் போன்ற உலக பிரபல காலணி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி தங்கள் உற்பத்தி மையங்களை மாற்றி அமைக்கத் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான முக்கிய காரணங்கள் பல இருக்கின்றன. இந்தியாவில் தொழிலாளர்களின் உழைப்பு செலவு மிகவும் குறைவாக இருப்பது முதல் காரணமாகும். அதோடு தொழிலாளர்கள் பணிபுரியும் விதிமுறைகள் சீர்திருத்தமாகவும் ஏற்கக்கூடிய வகையிலும் உள்ளன.
மேலும், இந்தியா உற்பத்தித் திறனில் பெரிய முன்னேற்றத்தை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் காலணி உற்பத்திக்கான சிறந்த தொழிற்சாலைகள் மற்றும் அதற்கான அடிப்படை வசதிகள் இருப்பதும், இந்த நிறுவனங்களை தமிழகத்தை நோக்கி இழுத்து வரும் முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் தொழிலாளர்கள் ஒன்றுக்கு $0.90 வரை ஊதியம் பெறுகின்றனர். இது சீனாவில் $3, வியட்நாமில் $2 மற்றும் இந்தோனேசியாவில் $1.5 ஆகும். எனவே உற்பத்தி செலவுகளை குறைக்க இந்தியா மிகவும் பொருத்தமான இடமாக திகழ்கிறது.
தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள JR கோதாரி நிறுவனம் மற்றும் தாய்வானின் Shoe Town Group இணைந்து நிறுவிய காலணி தொழிற்சாலை தற்போது ஆண்டுக்கு 2 மில்லியன் Crocs காலணிகளை உற்பத்தி செய்து வருகிறது. மேலும், தமிழக அரசுடன் கூட்டாண்மை புரிந்து Adidas காலணிகளை உற்பத்தி செய்ய ரூ.5000 கோடி முதலீடு செய்யும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அறிவித்துள்ள புதிய வரி கட்டணங்கள் உலகளாவிய காலணி தயாரிப்பு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வியட்நாம் நாட்டில் தயாரிக்கப்படும் காலணிகள் மீது 60% வரை வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியாவில் தயாரிக்கப்படும் காலணிகள் மீது 36% வரை வரி விதிக்கப்பட இருக்கிறது.
அதேசமயம் சீனாவிற்கு ஏற்கனவே இருந்த 20% வரிக்கு மேலாக மேலும் 34% வரி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த உயர்வான வரி கட்டணங்களால், பல முக்கியமான உலகளாவிய நிறுவனங்கள் ‘China +1 strategy’ எனப்படும் உற்பத்தி திட்டத்தின் கீழ் சீனாவை தவிர்த்து இந்தியாவை முக்கிய உற்பத்தி மையமாக மாற்ற முன் வருகின்றன.
வேலை வாய்ப்பும் வளர்ச்சி வாய்ப்பும்:இந்த புதிய நிலைமையின் மூலம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் பெரிதும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே Nike, Adidas, Puma, Crocs போன்ற பிரபல நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகின்றன.
இந்தியாவின் காலணி ஏற்றுமதி கடந்த சில வருடங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியா 10-12% வரிக்குள் காலணிகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் தற்போதைய நிலைமையில் இந்தியாவின் போட்டியாளர்களான வியட்நாம், கம்போடியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் 46% முதல் 60% வரைக்குமான வரிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் இந்தியாவிற்கு பெரும் சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது.
இனியும் நாடுகளுக்கிடையே வரி கட்டணங்கள் அதிகரித்து வந்தாலும் இந்தியா தனது தொழில்துறை வளர்ச்சியால் முன்னேறும் வாய்ப்பு பெரிதாகும். காலணி உற்பத்தி துறையில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கப் போகிறது என்பது உறுதி. இதன் மூலம் வேலைவாய்ப்பும் முதலீடும் வளர்ச்சியும் இந்திய பொருளாதாரத்துக்கு புதிய முன்னேற்றம் தரும்.