புதுடெல்லி: ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 1.4 லட்சத்தை தாண்டியுள்ளது. 2016ல் இந்தியாவில் 400 ஸ்டார்ட்அப்கள் மட்டுமே இருந்தன.இப்போது அந்த எண்ணிக்கை 1.4 லட்சத்தை தாண்டியுள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாத் சமீபத்தில் ராஜ்யசபாவில் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், “மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 25,044 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.
15,019 ஸ்டார்ட்அப்களுடன் கர்நாடகா 2வது இடத்திலும், 14,734 ஸ்டார்ட்அப்களுடன் டெல்லி 3வது இடத்திலும் உள்ளன. 4வது இடத்தில் உத்தரபிரதேசம் (13,299), 5வது இடத்தில் குஜராத் (11,436) உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், 2016ல், மத்திய அரசு, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டர்கள், ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் மத்திய அரசு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அன்னிய முதலீடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், உள்நாட்டு முதலீடுகள் கிடைக்கச் செய்யவும் மத்திய அரசு பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது’’ என்றார்.