தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (NIFTEM) நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சிராக் பாஸ்வான் கூறியதாவது: உலகின் இரவு உணவு மேசையில் குறைந்தபட்சம் ஒரு உணவு இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதை நாம் ஒரு இயக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு உற்பத்தியில் நமது நாடு உலகளவில் முன்னணியில் இருந்தாலும், நாம் உற்பத்தி செய்யும் விளைபொருட்களில் ஒரு பகுதி மட்டுமே பதப்படுத்தப்படுகிறது.
உணவு பதப்படுத்துதல் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வீணாவதைக் குறைத்தல், ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் மற்றும் அனைவருக்கும் மலிவு விலையை உறுதி செய்தல் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது. உணவு தொழில்நுட்பத்தில் இந்த புதிய மாற்றங்களைச் செயல்படுத்துவதன் மூலம், மக்கள், விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.
அதிகரித்து வரும் தேவைகளை உணர்ந்து, மத்திய அரசு உணவு பதப்படுத்தும் துறையை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்துகிறது. இந்தத் துறையில், திறமையான நிபுணர்கள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சிக்காக கூடுதலாக ஒரு NIFTEM நிறுவனத்தை அமைப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உணவு பதப்படுத்தும் துறையில் புதிய அறிவார்ந்த முறைகளை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.
மேலும், உற்பத்தி தொடர்பான மானியத் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா போன்ற திட்டங்கள் மூலம் மத்திய அரசு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கி வருகிறது. இந்த அடித்தளத்தை மேம்படுத்துவதன் மூலம், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற தனிநபர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள்.
இதேபோல், உணவு தொழில்நுட்பம் மற்றும் பதப்படுத்துதல் மாணவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை செயல்படுத்தி, தொழில்நுட்பங்களை நடைமுறை பயன்பாடுகளாக மாற்றுவதன் மூலம் இந்தியாவை உலகளாவிய தலைவராக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு, தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் உணவு பேக்கேஜிங் முறைகளின் பயன்பாடு உணவு பதப்படுத்துதலை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது. இதனால், உலகளவில் உணவு பதப்படுத்தும் துறையில் இந்தியா முன்னணி இடத்தைப் பிடிக்கும். இவ்வாறு அவர் தனது உரையை முடித்தார்.