சென்னை: கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது கடந்த வாரம் விமர்சனம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அதே கட்சிகளை கூட்டணிக்கு அழைத்துள்ளார். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார். “2025 ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை எடப்பாடியின் கூட்டணி அழைப்பே,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முத்தரசன் கூறியதாவது, “ஏற்கனவே பாஜகவுடன் சேர்ந்து ரத்தம் படிந்த கம்பளத்தில் பயணிக்கிறார். அதனை ரத்தினக் கம்பளமென கூறுவதை நாங்கள் ஏற்க முடியாது” என்றார். மேலும், தேசிய கல்விக் கொள்கை, உதய் மின் திட்டம், மற்றும் மீனவர் பிரச்சனை குறித்து எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாதது கண்டிக்கத்தக்கது என்றார்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகமும் அதே கோணத்தில் விமர்சனம் செய்துள்ளார். “காலையில் ஒன்று பேசும், மாலையில் மாறுபட்டது பேசும் எடப்பாடி, தற்போது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். கம்யூனிஸ்டுகளை கடந்த வாரம் நிராகரித்து, இப்போது வரவேற்பது வஞ்சகம்” என்றார்.
அதிமுக தற்போது கூட்டணியில் பாஜக, மற்றும் சில புதிய கட்சிகளை இணைக்க முயல்கிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த அழைப்பை உறுதியாக நிராகரிக்கின்றன. “அதிமுக விரிப்பது ரத்தினக் கம்பளம் அல்ல, வஞ்சக வலை” எனவும் சண்முகம் கூறினார்.
இதனால், தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னோட்டத்தில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மீதும், அரசியல் வாதிகளின் நிலைப்பாடுகளிலும் பெரும் பரபரப்பாக உள்ளது.