அமேசான் நிறுவனம் ரூ.500 அல்லது அதற்கு மேற்பட்ட உடனடி வங்கி தள்ளுபடிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.49 செயலாக்கக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை ஏற்கனவே ப்ளிப்கார்ட்டில் இருந்தாலும், தற்போது அமேசானும் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் தங்கள் செலவுகளை கணக்கிடும்போது இந்த கூடுதல் கட்டணத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ரூ.500 வங்கி தள்ளுபடியுடன் ரூ.6,000 மதிப்புள்ள பொருளை வாங்கினால், முன்பு ரூ.5,500 மட்டுமே செலவாக இருந்தது. ஆனால், தற்போது ரூ.49 செயலாக்கக் கட்டணம் சேர்க்கப்படுவதால், ரூ.5,549 ஆக செலவாகும்.
இந்த கட்டணம் அமேசான் பிரைம் உறுப்பினர்கள் உட்பட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், ரூ.500க்கு குறைவான வங்கி தள்ளுபடிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தக் கட்டணம் விதிக்கப்படாது.
ரூ.500 அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி தள்ளுபடியைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த கட்டணத்தைக் கட்டவேண்டும். பிரைம் உறுப்பினர்களுக்கு கூட இதிலிருந்து விலக்கு இல்லை. ரூ.500க்கு குறைவான தள்ளுபடிகளுக்கு இந்த கட்டணம் தேவையில்லை.
அமேசான் வாடிக்கையாளர் உதவி மையத்தின் படி, ஆர்டர் ரத்து செய்யப்பட்டாலும் அல்லது திருப்பி அனுப்பப்பட்டாலும், ரூ.49 செயலாக்கக் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது.
அமேசான், வங்கி தள்ளுபடி சலுகைகளை நிர்வகித்தல் மற்றும் செயலாக்கம் செய்யும் செலவுகளை ஈடுகட்டுவதற்காக இந்த கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடிப்படையில் தள்ளுபடிகளுக்கான சேவைக் கட்டணமாகவே கருதப்படுகிறது
இதனால், வாடிக்கையாளர்கள் தள்ளுபடி சலுகைகளைப் பயன்படுத்தும் போது இந்த கட்டணத்தையும் கருத்தில் கொண்டு தங்களது செலவுகளை திட்டமிடுவது முக்கியம்.