ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார்துறை பல முக்கிய விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ரயில்வே, வங்கிகள், வரி நிர்வாகம், UPI பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல துறைகளில் விதிமாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. பயணிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மாற்றங்களை கவனத்தில் எடுத்து தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

முதலில், ரயில்வே துறையில் AC மற்றும் non-AC விரைவு ரயில்களில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. 1 கிலோமீட்டருக்கு 1 பைசா non-AC மற்றும் 2 பைசா AC வகையில் கட்டணம் உயரக்கூடும். அதேபோல், தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஆதார் கட்டாயமாகும். முகவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் முன்பதிவு செய்ய முடியாத கட்டுப்பாடும் வரவுள்ளது. IRCTC வழியாக டிக்கெட் பெறுவதற்கும் OTP அடிப்படையிலான ஆதார் சரிபார்ப்பு தேவைப்படும்.
மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளதுபோல், பான் கார்டுக்கு இனி ஆதார் கட்டாயமாகும். புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் இல்லாவிட்டால் அனுமதி கிடையாது. வங்கி சேவைகளிலும் மாற்றங்கள் உள்ளன – SBI, HDFC, ICICI வங்கிகள் தங்களுடைய கார்டு விதிகளை மாற்றியுள்ளன. குறிப்பாக, கிரெடிட் கார்டு செலவுகளில் புதிய கட்டணங்கள், ATM பரிவர்த்தனைகளில் வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
NPCI அறிமுகப்படுத்தும் UPI மாற்றங்களின் காரணமாக, இனி பரிவர்த்தனை செய்யும் போது பெறுநரின் அதிகாரப்பூர்வ பெயரையே காண்பிக்கப்படும். மோசடிகளை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடைமுறை வரவிருக்கிறது. EPFO 3.0 அறிமுகம், LPG சிலிண்டர் விலை திருத்தம் போன்றவை கூட ஜூலை முதல் அமலுக்கு வரக்கூடும். இந்த அனைத்து மாற்றங்களும் நேரம் தவறாமல் செயல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதால், மக்கள் முன்னோக்கி செயல்பட வேண்டும்.