உத்தரப்பிரதேசத்தின் புனித நகரான வாரணாசியில் இன்று (ஏப்ரல் 11) பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்தார். நிகழ்வொன்றில் பங்கேற்ற அவர், மொத்தம் ரூ.3,880 கோடி மதிப்பிலான 44 நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களையும் நிர்வாக அதிகாரிகளையும் நேரில் சந்தித்த பிரதமர், முக்கிய விஷயங்களை எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடி தனது உரையில், “காசி எனக்கே சொந்தமானது. நான் இந்நகரத்தின் பிள்ளை. கடந்த 10 ஆண்டுகளில் வாரணாசி மிகவேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். அவர் தொடங்கிவைத்த திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும், இளைஞர்களுக்கும் நவீன வசதிகளை உருவாக்கும் என்று குறிப்பிட்டார்.
தன்னை அதிகாரத்தில் எதையும் தனிப்பட்ட இலாபத்திற்கு பயன்படுத்தாத ஒருவராக வர்ணித்த மோடி, “எதிர்க்கட்சிகள் பலர் தங்கள் குடும்ப நலன்களை மேம்படுத்துவதில் மட்டும் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒவ்வொரு குடிமகனின் வாழ்வாதார முன்னேற்றத்தை நோக்கியே செயல்படுகிறோம்” எனத் தம் அரசின் நோக்கத்தை விளக்கியார்.
அதேசமயம், வாரணாசியின் நவீன உள்கட்டமைப்பு, சாலைகள், சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ முன்னேற்றங்களைப் பற்றிய பாராட்டுகள் இன்று நாடு முழுவதும் இருந்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். “வயதானவர்களுக்கு இலவச சிகிச்சை என்பது எனது உறுதி. டில்லி மற்றும் மும்பையின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிச்சைகள், இப்போது உங்கள் வீட்டு வாசலிலேயே கிடைக்கின்றன” என்றார் மோடி.
இந்தியாவின் பால் உற்பத்தி சாதனையை குறிப்பிடும் போது, பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியது, “உலகில் அதிக அளவில் பாலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பால் உற்பத்தி 65 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பு சகோதரர்களின் வெற்றி” என்றார்.
இந்தியாவின் வளர்ச்சியில் உழைக்கும் மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும், அவர்களின் நலனுக்காக தான் தொடர்ந்து செயல்படுவதாகவும் அவர் உறுதியளித்தார். வாரணாசியின் அபிவிருத்தி தான் நாடு முழுக்க நடைபெறும் மாற்றத்தின் ஒரு முன்னோடியான எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் மோடி தனது உரையை முடித்தார்.