புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில் 700 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் திட்டத்தை அமைக்க மத்திய அமைச்சரவை 8,146.21 கோடி ரூபாய் ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று டில்லியில் கூடி, வடகிழக்கு மாநிலமான அருணாச்சலின் ஷி யோமி மாவட்டத்தில் டாட்டோ நீர்மின் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்தது.

இந்த திட்டத்தை வடகிழக்கு மின் சக்தி கட்டமைப்பு மற்றும் அருணாச்சல் அரசு இணைந்து மேற்கொள்ள உள்ளன. ஆறு ஆண்டுகளில் முடிக்கப்பட உள்ள இந்த திட்டம், ஆண்டுக்கு 2,738.06 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதில் 12% மின்சாரம் அருணாச்சல பிரதேசத்துக்கு இலவசமாக வழங்கப்படும்.
நீர்மின் நிலையம் அமைக்கப்பட உள்ள ஷி யோமி மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு 458.79 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அப்பகுதியின் சாலை, பாலம், மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் மேம்படும்.
அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, இந்த நீர்மின் திட்டம், வடகிழக்கு மாநிலங்களின் மின் உற்பத்தி திறனை அதிகரித்து, நாட்டின் பசுமை எரிசக்தி இலக்குகளை நிறைவேற்ற உதவும் எனக் கூறப்படுகிறது.