லக்னோ: உத்தர பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தில் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், மதமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது மீதான புகாரின் அடிப்படையில், பல்வேறு பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரை பிடிக்க 50,000 ரூபாய் பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மாத்பூர் பகுதியில் பதுங்கியிருந்த சங்கூர் பாபா மற்றும் அவரது துணை நஸ்ரின் ஆகியோர் சமீபத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நாச வேலைகளில் ஈடுபடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், இந்த இருவரும் மதமாற்றத்தை ஒருங்கிணைத்த முக்கிய நபர்கள் என்பதும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசார் தெரிவித்ததாவது, “ஏழைகள், ஆதரவற்றோர், பெண்கள் உள்ளிட்ட பலரை பணம், திருமண ஆசை, அல்லது பயமுறுத்தல் மூலமாக மதம் மாற்ற செய்துள்ளனர். இவர்கள் செயல்பாடு சமூக அமைதிக்கே பெரும் சவாலாக இருந்தது.” இதன் பேரில், அவர்களது சட்டவிரோத சொத்துக்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் நேற்று புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர்.
இந்த நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, “மதமாற்ற கும்பலுடன் தொடர்புடைய எவராக இருந்தாலும், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இது தேசத்திற்கே எதிரான செயல். எந்தவிதமான சமரசமும் இருக்காது” என்றார். இந்த சம்பவம் மாநில அரசின் கடுமையான நடவடிக்கையை வெளிப்படுத்துகிறது.