உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள டைமர் பகுதியில் ரஷ்யப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஐந்து மாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில், மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தாக்குதல் நடைபெற்ற உடனேயே தீப்பற்றிய கட்டிடத்தில் இருந்து 9 பேர் மீட்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடக்கத்தில் பலர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக நவம்பர் 23 அன்று வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் குழந்தைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் கட்டிடத்தின் பல பகுதிகள் முற்றிலும் சேதமடைந்ததால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
