உக்ரைன்: உக்ரைன் நாட்டின் டினிப்ரோ (Dnipro) நகரில் உள்ள முக்கிய ரயில் நிலையத்தில் ரஷியப் படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ரயில் புறப்படுவதற்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை காலை பயணிகள் ரயில் ஒன்று சபோரிஷியா நகருக்குப் புறப்படத் தயாராக இருந்தபோது, அதிவேகமாகச் செல்லக்கூடிய ஜெட் டிரோன் ரயில் நிலைய நடைமேடையைத் தாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் தீ விபத்தும் சேதமும் ஏற்பட்டது. மீட்புப் படையினர் உடனடியாக விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதே நாளில் உக்ரைனின் செர்னிஹிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இளம் பெண்களும், கிரெமென்சுக் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் மொத்த உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது.
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் பயணிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க சர்வதேச நாடுகள் ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, தெற்கு உக்ரைனின் ஒலெஷ்கி பகுதியில் அமெரிக்காவின் முயற்சியால் உருவான ஆறு நாள் உள்ளூர் போர் நிறுத்தம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. அங்கு சிக்கியுள்ள பொதுமக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
போர் நிறுத்த முயற்சிகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், மறுபுறம் பொதுமக்கள் உயிரிழக்கும் வகையில் தாக்குதல்கள் தொடர்வது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
