ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவின் சிகையலங்காரம், ஒப்பனை உள்ளிட்ட தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக கடந்த 7 ஆண்டுகளில் ரூ.4 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டிருப்பது அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த வழக்கறிஞர் விங்க்லர் ஷலித், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் நெதன்யாகுவின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக்காக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்த விவரங்களை கேட்டிருந்தார்.
இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் 2019-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.
ரூ.4.49 கோடி செலவு
அதன்படி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பிரதமரின் சிகையலங்காரம், ஒப்பனை மற்றும் தோற்றத்தை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் ரூ.4.49 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 90 சதவீத தொகை, அதாவது ரூ.4.04 கோடி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவுக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாத வாரியாக செலவிடப்பட்ட தொகை குறித்த விவரங்களும் பிரதமர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் பிரதமர் மற்றும் அவரது மனைவியின் தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக அரசு நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த விவரங்கள் இஸ்ரேலில் அரசு செலவினங்கள் மற்றும் பொது நிதி பயன்பாடு தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
