நைரோபி: மத போதனைகளின் பெயரில் தன்னைப் பின்பற்றியவர்களையும் அவர்களது குழந்தைகளையும் பட்டினி கிடக்கச் செய்து உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட கென்யாவைச் சேர்ந்த பால் மெக்கன்சி மற்றும் அவருடன் தொடர்புடைய 28 பேர் மீது தொடரப்பட்ட கொலை வழக்கில், நீதிமன்றம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு கென்யாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தை நடத்தி வந்த பால் மெக்கன்சி, உலகம் விரைவில் அழியப்போகிறது என்றும், சொர்க்கத்தை அடையப் பட்டினி கிடக்க வேண்டும் என்றும் தன்னைப் பின்பற்றியவர்களிடம் கூறியதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. இதனை நம்பிய பலர் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் உணவு வழங்காமல் இருந்ததாக விசாரணையில் கூறப்பட்டது.
2023 ஏப்ரல் மாதத்தில் கென்யாவின் கடலோரப் பகுதியில் உள்ள ஷகாஹோலா வனப்பகுதியில் பல உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு உலகளவில் கவனத்தைப் பெற்றது. பின்னர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 400-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெக்கன்சி முன்னாள் டாக்ஸி ஓட்டுநர் ஆவார். அவர் 2003-ஆம் ஆண்டு குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தைத் தொடங்கினார். அவருடைய போதனைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சையைத் தவிர்க்குமாறு தன்னைப் பின்பற்றியவர்களிடம் கூறியதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, 190 குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மெக்கன்சி உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நவம்பர் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்புத் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம், மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது, குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் ஆபத்தான போதனைகளுக்கு எதிராக அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறித்து கென்யாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத நம்பிக்கைகள் தனிநபர்களின் உரிமையாக இருந்தாலும், அவற்றின் பெயரில் குழந்தைகளின் உயிருக்கும் உடல்நலத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
