புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்துள்ள நிலையில், அவர் பயணம் செய்துள்ள ‘இல்-96-300பியூ’ என்ற சிறப்பு விமானம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
ரஷ்ய அதிபர் வெளிநாட்டு பயணங்களின்போது பொதுவாக சிறப்பு விமானத்தையே பயன்படுத்துகிறார். ரஷ்ய அதிபருக்காக பயன்படுத்தப்படும் இந்த விமானம், சர்வதேச ஊடகங்களில் ‘பறக்கும் கிரெம்ளின்’ மற்றும் ‘டூம்ஸ்டே விமானம்’ என குறிப்பிடப்படுகிறது.
11 ஆயிரம் கி.மீ. பயணம்
1980-களில் இல்-96 விமான குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விமானம், நீண்ட தூர பயணத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 என்ஜின்களைக் கொண்ட இந்த விமானம் ஒரே நேரத்தில் சுமார் 11 ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் நீளம் சுமார் 55.35 மீட்டராகவும், இறக்கையின் அகலம் சுமார் 60.12 மீட்டராகவும் உள்ளது.
ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு மற்றும் முக்கியமான அரசு தொடர்புகளுக்காக இந்த விமானத்தில் மேம்பட்ட தகவல் தொடர்பு வசதிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவசர காலங்களில் இது நடமாடும் கட்டளை மையமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆடம்பர வசதிகளும் உண்டு
பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளுக்கு அப்பால், அதிபருக்கான தனிப்பட்ட அறைகள், படுக்கையறை, சமையலறை, உணவருந்தும் பகுதி, மாநாட்டு அறை உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் உயர்தர மர வேலைப்பாடுகள், தோல் இருக்கைகள் உள்ளிட்ட ஆடம்பர அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில்
புதினின் வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது இந்திய பயணத்தின்போதும் ஒரே மாதிரியான இரண்டு சிறப்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு விமானங்களும் ஒரே நேரத்தில் இயக்கப்படுவதன் மூலம் அதிபர் எந்த விமானத்தில் பயணம் செய்கிறார் என்பதை வெளிப்புறத்தினர் எளிதில் கண்டறிய முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
