தென் அமெரிக்க நாடான பெருவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அயகுச்சோ பிராந்தியத்தின் சனபம்பா கிராமப்புறப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அபுரிமாக், எனே மற்றும் மந்தாரோ நதிப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ராணுவப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் மொத்தம் ஒன்பது ராணுவப் பணியாளர்கள் இருந்துள்ளனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
விபத்தில் சிக்கிய ஒன்பது பேரும் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஹெலிகாப்டரை இயக்கிய விமானி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த ராணுவ வீரர்களின் விவரங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தொழில்நுட்பக் கோளாறு, மோசமான வானிலை அல்லது வேறு ஏதேனும் காரணம் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த விபத்து பெரு ராணுவத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
