துபாய்: துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் பயணிகள் விமானத்தில், இந்திய தலைமை விமானியை தாக்கி விமானத்தை மோதச் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்ட ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 30-ம் தேதி இயக்கப்பட்ட FZ1073 விமானத்தில் 170-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது துணை விமானி திடீரென தலைமை விமானி ஸ்மித் மச்சரை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த நிலையிலும் மச்சர் விமானத்தின் கட்டுப்பாட்டை மீட்க முயன்றார்.
தபூக்கில் அவசர தரையிறக்கம்
விமானம் திடீரென ஆயிரக்கணக்கான அடி உயரத்தை வேகமாக இழந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். காக்பிட் கதவு திறக்கப்பட்டதும் பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் தலையிட்டு தாக்குதல் நடத்தியவரை கட்டுப்படுத்தினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
முந்தைய பணியிலும் சர்ச்சை
ஹமாம் அல்-ஹம்மாமி, இதற்கு முன்பு ஓமன் ஏர் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும், தீவிரவாதக் கருத்துகள் குறித்த கவலைகளால் விமானப் பணிகளில் இருந்து விலக்கப்பட்டதாகவும் பல்வேறு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பின்னர் அவர் ஃப்ளைதுபாயில் பணியில் சேர்ந்துள்ளார். அவரது முந்தைய பணிப் பின்னணி, சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் சாத்தியமான தீவிரவாதத் தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தின் உண்மையான நோக்கம் மற்றும் அவர் தனியாக செயல்பட்டாரா அல்லது வேறு யாருடைய தூண்டுதலின் பேரில் செயல்பட்டாரா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
