மியாமி: அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் நாதன் தாமஸ், உலகின் இளம் பேராசிரியர் என்ற சாதனையை படைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
புளோரிடாவைச் சேர்ந்த நாதன் தாமஸ், 18 ஆண்டுகள் 346 நாட்களில் பேராசிரியர் பதவியை பெற்றுள்ளார். இதன் மூலம் 2008-ம் ஆண்டு 18 வயதில் பேராசிரியரான அலியா சபூரின் சாதனையை முறியடித்துள்ளார். அவரைவிட நாதன் தாமஸ் 16 நாட்கள் இளையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 1717-ம் ஆண்டில் தனது 19-வது வயதில் பேராசிரியராக பதவியேற்ற ஸ்காட்லாந்து கணிதவியலாளர் கோலின் மெக்லாரின் இளம் பேராசிரியர் என்ற சாதனையை வைத்திருந்தார்.
நாதன் தாமஸ் தனது 10-வது வயதிலேயே பள்ளிப் படிப்புடன் கல்லூரிப் படிப்பையும் தொடங்கியுள்ளார். 14 வயதில் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பைத் தொடங்கினார்.
மின் பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை 18 வயதுக்குள் முடித்துள்ளார். தற்போது தான் படித்த மியாமி டேட் கல்லூரியில் பொறியியல் பாடங்களை கற்பிக்கும் பேராசிரியராக பணியில் இணைந்துள்ளார். மேலும் மியாமி பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் டாக்டரேட் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.
