நியூயார்க்: செப்டம்பர் 11, 2001 அன்று, அல்-காய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களில் மோதினர். இதில், 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.
இந்த கொடூர தாக்குதலின் 23-வது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டுள்ள கிரவுண்ட் ஜீரோ நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் அரசியல் வேறுபாடுகளை மீறி பங்கேற்றனர்.
குறிப்பாக, அமெரிக்க அதிபர் தேர்தலின் போட்டியாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் முதல் தேர்தல் விவாதத்தில் பங்கேற்று சில மணி நேரங்களில் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதற்கிடையில், 2001 செப்டம்பர் 11-ம் தேதி உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா இணையதளத்தில் பகிர்ந்துள்ளது.
நாசா விண்வெளி வீரர் பிராங்க் கல்பர்ட்சன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தீவிரவாத தாக்குதலை நேரில் பார்த்து படம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.