கொழும்பு: இலங்கையில் கேபிள் கார் விபத்தில் இந்தியர் உள்பட 7 புத்த துறவிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் நிகவெரட்டி அருகே புத்த மடம் ஒன்று அமைந்துள்ளது. இது கொழும்புவில் இருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் தியானம் செய்ய இங்கு வருகை தருவர். இங்கு தரைப்பகுதியில் இருந்து கேபிள் கார் மூலம் துறவிகள் மலையில் இருக்கும் தியான மண்டபங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இந்நிலையில், ஒரு சிறிய கேபிள் கார் பெட்டியில் துறவிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேபிள் கார் பெட்டியின் கேபிள் அறுந்துவிட்டது. இதனால், கார் வேகமாக கீழே இறங்கி வந்து ஒரு மரத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த 6 பேரில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேபிள் கார் அறுந்து 7 துறவிகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.