சிகாகோ: அமெரிக்காவில் போலி ஆவணங்கள் வழங்கி முதலீட்டாளர்களை ஏமாற்றிய இந்திய வம்சாவளி தொழிலதிபர் ரிஷி ஷாவுக்கு, 38, ஏழரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோவில் வசிப்பவர் ரிஷி ஷா. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், 2006ல், ‘அவுட்கம் ஹெல்த்’ என்ற நிறுவனத்தை துவக்கினார். புதுமையான விளம்பரம் மூலம், நோயாளிகளுக்கும் மருந்து நிறுவனங்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி, மருந்து நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்க முடியும் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக ‘அவுட்கம் ஹெல்த்’ நிறுவனம் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர் அறைகளில் மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளின் விளம்பரங்களை ஒளிபரப்பி வந்தது.
இதையடுத்து பல பிரபல மருத்துவ நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு பணம் கொடுத்தன. நிறுவனத்தின் வளர்ச்சியைப் பார்த்து முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தில் முதலீடு செய்தன.
இந்நிலையில், 2017ல், ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழ், அவுட்கம் ஹெல்த் போலி ஆவணங்களை தயாரித்து, முதலீட்டாளர்களிடம், 8,300 கோடி ரூபாய் மோசடி செய்ததை அம்பலப்படுத்தியது.
கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் உள்ளிட்ட நிறுவனத்தின் முதலீட்டாளர்களும் பணத்தை இழந்துள்ளனர்.
இதையடுத்து, அந்நிறுவனத்தின் நிறுவனர் ரிஷி ஷா, இணை நிறுவனர்கள் பிராட் பர்டி, ஷ்ரத்தா அகர்வால் ஆகியோர் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் சாட்சியங்களை அந்நாட்டு நீதிமன்றம் விசாரித்து அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது.
இதையடுத்து, ரிஷி ஷாவுக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல், இணை நிறுவனர்களான பிராட் பர்டிக்கு இரண்டு ஆண்டுகள் மூன்று மாத சிறைத்தண்டனையும், ஷ்ரத்தா அகர்வாலுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.