மியாமி: மியாமியில் உணவு டெலிவரி செய்யும் ‘கோகோ’ (Coco) நிறுவனத்தின் குட்டி ரோபோட் ஒன்று, தண்டவாளத்தைக் கடக்கும்போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நடுவிலேயே நின்றுவிட்டது. இது டெக்னாலஜி வளர்ச்சி அடைந்தாலும் சொதப்பும் என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.
அந்தப் பக்கமாக நாய் நடைப்பயிற்சி மேற்கொண்டவர் இதைப் பார்த்துவிட்டுத் தகவல் கொடுத்தும், உதவி வருவதற்குள் ‘பிரைட்லைன்’ (Brightline) ரயில் சீறிப்பாய்ந்து வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரோபோட்டை ரயில் மோதிச் சிதறடித்த காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நல்லவேளையாக, இது ஒரு மனிதன் ஓட்டும் வாகனமாக இல்லாமல் ரோபோட்டாக இருந்ததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது என்று அந்த நிறுவனம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தானியங்கி தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு குறித்து பெரிய விவாதமே கிளம்பியுள்ளது. இதேபோல சமீபத்தில் பீனிக்ஸ் நகரில் ‘வேமோ’ என்ற தானியங்கி டாக்ஸியும் தண்டவாளத்தில் சிக்கிய சம்பவம் நிகழ்ந்தது.