புதுடில்லி: பாதிப்பு இல்லாமல் கடந்து சென்றது… ‘நாசா’ எச்சரிக்கை விடுத்த நிலையில் பாதிப்பு இல்லாமல் பூமியை சிறுகோள் கடந்து சென்றது. இதே சிறுகோள் பூமியை 2035ல் மீண்டும் நெருங்கும் என நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
விண்வெளியில் சுற்றும் ராட்சத விண்கற்கள் சில பூமியின்மீது மோதி அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்வது வாடிக்கை. குறிப்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக பூமியின் அருகே கடந்து செல்லும் ராட்சத விண்கற்கள் குறித்து அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில், 2024 on என்ற சிறுகோள், தற்போது பூமியை நோக்கி அதிகவேகமாக வந்து கொண்டு இருக்கிறது என நாசா எச்சரிக்கை விடுத்து இருந்தது. பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது.
சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியைப் பாதிக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர். 720 அடி விட்டம் கொண்ட இந்த ராட்சத சிறுகோள், இரண்டு கிரிக்கெட் மைதானங்களை விட பெரியதாக இருக்கும் என கணித்து இருந்தனர்.
இந்நிலையில், பாதிப்பு இல்லாமல் பூமியை சிறுகோள் கடந்து சென்றது. இது குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது: சிறுகோள் பூமியில் இருந்து 10 லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில், எந்த பாதிப்பும் இல்லாமல் கடந்து சென்றது. இதே சிறுகோள் வரும் 2035ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி மீண்டும் பூமியை கடந்து செல்லும்’. இவ்வாறு அவர்கள் கூறினர்.