டாக்காவிலிருந்து கிடைத்த தகவலின்படி, இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு துருக்கி இந்தியாவுக்கு எதிராக தனது ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்களை பயன்படுத்தியதால், இந்தியா மற்றும் துருக்கி இடையே உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து துருக்கி மற்றும் வங்கதேசம் இணைந்து செயல்படத் தொடங்கியிருப்பது, இந்தியா எதிர்நோக்கும் புதிய சவாலாக மாறியுள்ளது.

அதன் பின்னணியில், ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் சரணடைந்த போதும், துருக்கி அவர்களுக்கு ஆதரவாக தலையீடு செய்தது. துருக்கியின் ட்ரோன் தாக்குதலின் முயற்சி இந்தியாவால் முறியடிக்கப்பட்டது.
இதனால், துருக்கி இந்தியாவின் விரோத நாடாக திகழ்கிறது. அதிபர் எர்டோகன், இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கையை கண்டித்ததால், இந்திய வர்த்தகர்கள் துருக்கியுடனான தொடர்புகளை துண்டித்தனர். இதேவேளை, இந்திய சுற்றுலாப் பயணிகளும் துருக்கியை புறக்கணிக்கத் தொடங்கினர்.
தற்போது, துருக்கி மற்றும் வங்கதேசம் இடையே முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இருந்த நெருக்கமான உறவு தற்போது குறைந்திருப்பதை துருக்கி தனது இலாபமாக்க முயல்கிறது. துருக்கி அதிகாரிகள், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசை சந்தித்து, இந்தியாவை விட்டு விலக வேண்டுமென கேட்டுள்ளனர்.
இதன் விளைவாக, துருக்கி மற்றும் வங்கதேசம் இடையேயான உறவு மிகுந்த பலமடைந்துள்ளது. வங்கதேச தொழில் மேம்பாட்டு கழகத் தலைவர் சவுத்ரி ஆசிக் மஹ்மூத் பின் ஹரூன், 5 நாள் பயணமாக துருக்கி சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது, துருக்கி மற்றும் வங்கதேசம் பாதுகாப்பு துறையில் இணைந்து செயல்படுவது குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடந்தது.
துருக்கியின் MKE உற்பத்தி மற்றும் சோதனைத் தளங்களை அவர் பார்வையிட்டதோடு, புதிய ஹோவிட்சர் பீரங்கிகள் மற்றும் ஒட்டோகர் லைட் டாங்கிகள் வாங்கும் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளார். கடந்த ஆண்டில் வங்கதேசம் 18 MKE 105 மிமீ ஹோவிட்சர்கள் வாங்கிய நிலையில், தற்போது மேலும் 200 பீரங்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
இத்துடன், வங்கதேசம் முன்பு பிரதமராக இருந்த ஹசீனாவின் ஆட்சியில் துருக்கியுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு இருந்தாலும், அது இந்தியா மீது தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ், துருக்கியின் ஆதரவுடன் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறார்.
பாகிஸ்தானுக்கு நெருக்கமாக இருந்த துருக்கி, இப்போது வங்கதேசத்துடனும் நெருக்கம் காண்கின்றது. இது இந்தியாவுக்கு புதிய மற்றும் கவலைக்கிடமான சவாலாக உருவெடுத்துள்ளது.