வங்கதேசம் : இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது.
இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது.
அதேநேரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை வங்காள தேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. ஷேக் ஹசீனா மட்டுமின்றி, மேலும் 12 பேருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.