டெல்லி: ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து 9-வது நாளாக சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வரும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பாகிஸ்தானில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது மறு உத்தரவு வரும் வரை தடைசெய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையிலிருந்து ஏதேனும் விலக்கு தேவைப்பட்டால், மத்திய அரசின் முன் ஒப்புதல் தேவை” என்று கூறப்பட்டுள்ளது.