பெய்ஜிங்: திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சுற்றுலாப் பயணிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய மாகாணமான ஜிகாஷியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த அதிர்வுகள் பதிவான பகுதி திபெத்தின் புனித ஸ்தலமாக அறியப்படும் டிங்கிரி பகுதி. இது எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்படை முகாம்.
இந்த எதிர்பாராத நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டிங்கிரி முகாமில் உள்ள சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அங்குள்ள சீன அறிவியல் மையத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல சீனா தற்காலிகமாக தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள சுற்றுலா பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.