சீனா: எச்1பி விசா கட்டண உயர்வு கெடுபிடியால் இந்தியர்கள் கவலை அடைந்துள்ள நிலையில் அதிக நிபந்தனைகள் இல்லாத ‘கே’ விசாவை சீனா அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவின் விசா கெடுபிடி அதிகரித்து வரும் சூழலில், சீன அரசு சார்பில் ‘கே-விசா’ என்ற புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி அளிக்க வேண்டும். பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சூழலில், தற்போது எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்கா பலமடங்கு உயர்த்தியுள்ளது.
சீனா சார்பில் 12 வகையான விசாக்கள் நடைமுறையில் உள்ளன. வெளிநாட்டு பணியாளர்களுக்கு ஆர் விசா, இசட் விசா வழங்கப்படுகிறது. இதில் ஆர் விசாவில் 180 நாட்களும், இசட் விசாவில் ஓராண்டும் சீனாவில் தங்கியிருந்து பணியாற்ற முடியும்.இந்த சூழலில், புதிதாக கே விசாவை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அறிமுகம்செய்ய உள்ளோம். இதற்கான கட்டணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விசாவைப் பெற சீன நிறுவனங்களின் உத்தரவாதம் தேவையில்லை. அடிப்படை ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். நீண்டகாலம் சீனாவில் தங்கி பணியாற்றலாம்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் கே விசாவை எளிதாக பெறலாம். கல்வி பயிற்றுவித்தல், ஆராய்ச்சித் துறையில் இருக்கும் இளம் வல்லுநர்களும் கே விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். 2035-ல் உலகின் ஆராய்ச்சி, தொழில்நுட்ப தலைமையகமாக சீனாவை மாற்றஅதிபர் ஜி ஜின்பிங் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக இளம் ஆராய்ச்சியாளர், மிக சிறந்த ஆராய்ச்சியாளர் என்ற 2 திட்டங்களை சீன அரசு செயல்படுத்த உள்ளது. இவ்வாறு சீன வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.