பெய்ஜிங்: உலகின் மிகப்பெரிய அரிய கனிம உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இருக்கும் சீனா, திடீரென கிரிட்டிக்கல் மினரல்களின் (Critical Minerals) ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்திருந்தாலும், தற்போது அதன் தாக்கம் அதிகமாக தெரிகிறது.
இவை மின்சார வாகனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், எரிசக்தி அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிப்படையாக பயன்படும் காந்தங்கள் மற்றும் அரிய பூமி தனிமங்களை (Rare Earth Elements) குறிவைத்துள்ளன. இதில் சமாரியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், ஸ்காண்டியம் போன்றவை அடங்கும். இந்த பொருட்கள் மின்மோட்டார்கள், பிரேக் சிஸ்டம்கள், ஸ்மார்ட்போன்கள், ஏவுகணைகள் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சீனாவின் தேசிய பாதுகாப்பு காரணமாக இந்த கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டது. ஆனால் உலக நாடுகள் இதை ஆபத்தான வர்த்தக ஆயுதமாகவே கருதி வருகின்றன. உலகில் REE உற்பத்தியின் 60% சீனாவிலிருந்து வருவதோடு, சுத்திகரிப்பு செயல்பாடுகளில் 90% சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் மற்ற நாடுகள் அதன் மீது பெரிதும் சார்ந்திருக்கின்றன.
இந்த நிலையில் இந்தியா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் சீன அதிகாரிகளுடன் அவசரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிமங்கள் பெற முயற்சி செய்து வருகின்றன. ஆனால் அதற்கான அனுமதி பெறும் நடைமுறை பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகக்கூடும் என கூறப்படுகிறது. இதனால் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய சிக்கலில் சிக்கியிருக்கிறது. வாகன உதிரி பாகங்கள் ஜூன் மாதத்திற்குள் தட்டுப்பாடு அடையக்கூடும் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவும் இந்த கட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா பயன்படுத்தும் இட்ரியத்தின் 93% சீனாவிலிருந்து வந்துவந்தது. டெஸ்லா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் உற்பத்தி சிக்கலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. சீனாவின் இந்த முடிவு, அவர்களின் வர்த்தக பலத்தை அரசியல் ஆயுதமாக மாற்றும் நடவடிக்கையாக பலர் கண்டுள்ளனர்.
ஜப்பான் 2010ம் ஆண்டில் இதுபோன்ற அனுபவத்தை எதிர்கொண்டது. அப்போது சீனா, ஜப்பானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்காலிகமாக ஏற்றுமதியை நிறுத்தியது. இதன் பின்னர் ஜப்பான் சீனாவை தவிர்ந்த வேறு நாடுகளுடன் கனிமங்கள் குறித்த உறவுகளை அதிகரித்து அமைப்புகளை உருவாக்கியது. ஆனால் பிற நாடுகள் அந்த பாடத்தை முறையாகக் கவனிக்கவில்லை.
சீனாவில் மக்களாட்சியின் இன்மையால், ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி திடீர் நடவடிக்கைகளை எடுப்பதில் தயங்குவதில்லை. தற்போது அந்த செயல் உலகளவில் பெரும் பொருளாதார சிக்கலாக உருவெடுத்து வருகிறது. பல நாட்டு நிறுவனங்கள் மாற்று வளங்கள் தேடும் நிலையில் இருக்கின்றன. ஆனால் சீனாவைத் தவிர, இதனை மிக விரைவாக மாற்றக்கூடிய சாத்தியம் குறைவாகவே உள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச அமைப்புகள் தலையீடு செய்ய வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்துகின்றன. ஒரு சில நாடுகள் தற்போது தங்கள் சொந்த மினரல் வளங்களை உற்பத்தி செய்யும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளன. இருப்பினும், இந்த மாற்றம் நிகழ சில ஆண்டுகள் ஆகக்கூடும் என்பதால், தற்போதைய சூழலில் இந்த தீர்மானம் உலக பொருளாதாரத்தையே பெரிதும் பாதிக்கக்கூடியதாக அமையும்.