நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக சீனா உருவாக்கியுள்ள ஒரு மிகச் சிறிய டிரோன், தற்போது உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சென்டிமீட்டர் உயரம் கொண்ட இந்த மைக்ரோ டிரோன், முழுவதும் கொசு போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் நிற இறகுகள், கருப்பு உடல், மெல்லிய மூன்று கால்கள் என இயற்கையின் வடிவத்தை மிக நுட்பமாகப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் 0.3 கிராம் எடையுடன் செல்ஃபோன் மூலம் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் இந்த டிரோன், கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளில் பயன்படுத்த ஏற்றதாக இருக்கிறது.
இந்த டிரோனின் சீரற்ற சிறப்புமிக்க அம்சங்களில் முக்கியமானது, அது எந்தவொரு சத்தமும் எழுப்பாமல் பறக்கக்கூடியதுமாக, ரேடார் கண்காணிப்பில் கூட சிக்காமல் செல்லக்கூடியதுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ கேமரா மற்றும் மைக்ரோபோன்கள், உரையாடல்களை பதிவு செய்து நேரடி பரிமாற்றம் செய்யும் திறன் கொண்டவை. இது போன்ற வளர்ச்சியைச் சூழ்ச்சி நோக்கில் பயன்படுத்தினால், அந்த நாட்டின் பாதுகாப்பு துறைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சில நிபுணர்கள் இதனை விஞ்ஞானப் புரட்சியாக பாராட்டினாலும், பல நாடுகள் இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை கவலையுடன் காண்கின்றன. சிறிய அளவில் பறக்கும் இந்த டிரோன் மூலம் நச்சுத்தன்மை வாய்ந்த கிருமிகளை கொண்டு செல்லலாம், உளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம், சைபர் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என்பதாலேயே இந்த அச்சம் உருவாகியுள்ளது. இதுபோன்ற தொழில்நுட்பங்கள் உலக அரசியலில் புதிய புரிதல்களையும், பாதுகாப்பு சவால்களையும் உருவாக்குகின்றன.
இதே போன்று, ஏற்கனவே நார்வே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பூச்சி வடிவ டிரோன்களை உருவாக்கியுள்ளன. ஆனால் சீனாவின் கொசு வடிவ டிரோன் அதைவிட சிக்கலான தொழில்நுட்பம் கொண்டதாகும். இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன், இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்-ஈரான் மோதல்களில் டிரோன் முக்கியமான ஆயுதமாக மாறியுள்ளது. ஆனால், இந்த வகை டிரோன்கள் சோதனைகளுக்கு எளிதில் சிக்காததால், எதிர்காலத்தில் அது உருவாக்கும் தாக்கங்கள் மிக தீவிரமாக இருக்கும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.