வாஷிங்டன்: போலி ஆவணங்களை தயாரித்து அமெரிக்கா சென்ற இந்திய மாணவர் நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பெத்லகேம் லேஹை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய மாணவர் ஆர்யன் ஆனந்த்(வயது 19) என்பவர் சேர்ந்தார். ஆர்யன் ஆனந்தின் கல்வி கட்டணத்திற்கான முழு உதவித்தொகையும் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லேஹை பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக ஆர்யன் ஆனந்த் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, உயிருடன் இருக்கும் தனது தந்தைக்கு போலியான இறப்பு சான்றிதழை தயாரித்து, அதனை பல்கலைக்கழகத்தில் ஆர்யன் ஆனந்த் சமர்ப்பித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த மோசடிகள் அனைத்தும் ‘ரெடிட்’ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அந்த பதிவில், ‘எனது வாழ்க்கையை பொய்களைக் கொண்டு நான் கட்டமைத்துள்ளேன்’ என்ற தலைப்பின் கீழ், போலியான ஆவணங்கள் மூலம் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சேர்ந்தது எப்படி? என்பது தொடர்பான அனைத்து விவரங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த பதிவை வெளியிட்ட நபர் தனது பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை. இருப்பினும், அந்த பதிவை வெளியிட்டவர் பெத்லகேம் லேஹை பல்கலைக்கழகத்தை பின்தொடர்ந்து வருவதைக் கண்டு, இணைய வாசிகள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விஷயத்தை தெரியப்படுத்தி உள்ளனர்.
இதன் பின்னர், அந்த பதிவை வெளியிட்டவர் இந்திய மாணவரான ஆர்யன் ஆனந்த் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அவரது சேர்க்கையை பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்தது.
இதனை தொடர்ந்து ஆர்யன் ஆனந்த் கைது செய்யபப்ட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் மோசடி, சேவைகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆர்யன் ஆனந்துக்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருந்த நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் அவரை பல்கலைக்கழகத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்து, இந்தியாவிற்கு நாடு கடத்த கோர்ட் உத்தரவிட்டது.