சியோல்: வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து தென்கொரியா தனது வான்வெளியில் ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டதாக வடகொரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டியது.
ஆனால் இதை தென்கொரியா மறுத்துள்ளது. ஆனால் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியாவின் ஆளில்லா விமானங்கள் மீண்டும் வட கொரியாவின் வான் மீது பறந்தால், அது மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் இரு கொரியாக்களை இணைக்கும் முயற்சிகளை கைவிடும் வகையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று முன்தினம் அரசியல் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். அதன்படி தென்கொரியாவை முக்கிய எதிரி நாடாக வடகொரியா அறிவித்தது. மேலும், இரு நாடுகளையும் இணைக்கும் சாலைகள் மற்றும் ரயில் இணைப்புகளை வடகொரிய ராணுவம் குண்டுவீசி தாக்கியது.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி பறந்த ஆளில்லா விமானத்தின் பாகங்கள் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் தென்கொரிய ராணுவ அணிவகுப்பில் கண்டெடுக்கப்பட்ட அதே ஆளில்லா விமானத்தின் பாகங்கள் பியாங்யாங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது வடகொரியாவுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வீச பயன்படுத்தப்பட்டிருக்கலாம்” என தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை.