வாஷிங்டன்: ஈரான் அணு ஆயுத திட்டங்களை கட்டுப்படுத்த புதிய ஒப்பந்தத்தை அமெரிக்கா உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையில், அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுடன் வர்த்தக உறவை தொடரும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுக்கு அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் ஈடுபட மறுக்கும் நிலையை எதிர்த்து வரும் டிரம்ப், இந்நிலையில் மிக கடுமையான உரையினை வெளியிட்டுள்ளார். அணு ஒப்பந்தம் தொடர்பான அமெரிக்காவின் புதிய முயற்சியை ஏற்காமல், தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்கிற நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகள் உடனடியாக அமலாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதள அறிக்கையில், ஈரானில் இருந்து எண்ணெய் அல்லது பெட்ரோ கெமிக்கல் பொருட்களை கொள்முதல் செய்வது இனிமேல் எந்த ஒரு நாட்டிற்கும் அனுமதிக்கப்படாது என்று தெரிவித்தார். அத்தகைய நாடுகள் அமெரிக்காவுடன் வணிகம் செய்ய முடியாமல் தடையிடப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
ஈரானின் எண்ணெய் வருவாய் மூலமாக அவர்கள் அணு ஆயுதங்களை வளர்த்தெடுக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதி, அந்த வருவாயை முடக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இதன் மூலம், ஈரானை மீண்டும் வார்த்தை கேட்கச் செய்வது தான் அமெரிக்காவின் இலக்கு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது பல்வேறு நாடுகள் ஈரானுடன் எண்ணெய் வாங்கி வர்த்தகம் செய்து வருகின்றன. ஆனால், டிரம்பின் இந்த அறிவிப்பு பன்னாட்டு அரசியல் மற்றும் உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். எண்ணெய் சந்தை இந்த அறிவிப்புக்கு எதிராக எப்படி பதிலளிக்கும் என்பதை உலக நாடுகள் கவனமாக நோட்டமிட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, ஈரானை தனிமைப்படுத்தும் முயற்சியாகவும், வர்த்தகப் போருக்கு இன்னொரு கட்டமாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஈரான் மீது மேற்கொண்ட பொருளாதார தடைகள் ஏற்கனவே அந்த நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்திருந்தன. தற்போது இந்த புதிய உத்தரவு அந்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் இந்த எண்ணெய் தடையை தொடர்ந்து, பல நாடுகள் தங்கள் எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது உலக நாடுகள் இடையேயான வணிக உறவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.