ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் குனார் மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையை யொட்டிய பகுதியாகும். குனார் மாகாணத்தில் நேற்று இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0-வாக பதிவாகி இருந்தது. அடுத்தடுத்து 4.5 ரிக்டர் அளவில் பதிவானது.
நகங்கா் மாகாணத்தில் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு- வடகிழக்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது. அதை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமானது. இரவில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். எங்கு பார்த்தாலும் ஒரே அலறல் சத்தமாக கேட்டது.
நிலநடுக்கத்தில் முதலில் 622 பேர் பலியானதாக தகவல் வெளியானது. ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இதை தெரிவித்தார். 1,300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
குனார் மாகாணம்தான் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குதான் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என்றும், ஏராளமானோர் காயம் அடைந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. நூர்குல், சோகி, வாட்பூர் மனோகி, சபதாரே ஆகிய மாவட்டங்களில் குறைந்தது 250 பேர் பலியானதாக குனார் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 800-ஆக உயர்ந்துள்ளது. 2,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.