கெய்ரோ: அக்டோபர் 7, 2023 அன்று, இஸ்ரேல் மற்றும் காஸா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் ஒலிக்கத் தொடங்கிய போர்ச் சத்தம் இன்று வரை நிற்கவில்லை. இருநாட்டு அதிகார மையங்களுக்கு நடுவில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என உயிரை துறந்து வருகின்றனர்.
இருப்பினும் போரின் தீவிரம் குறையவில்லை. ஹமாஸை அழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் கூச்சலிடுகிறது. இஸ்ரேலிய இராணுவம் எகிப்துடனான எல்லையின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் ஹமாஸின் ஆயுதக் கடத்தலைத் தடுக்க அனைத்தையும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காஸாவில் இதுவரை 42,924 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 100,833 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தவர்களும் அடங்குவர். இந்நிலையில், காஸாவில் இரண்டு நாள் போர் நிறுத்தத்துக்கு எகிப்து அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஒரு வருடமாக எகிப்து, கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகள் காஸா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை ஊக்குவித்து வருகின்றன.
இதற்கிடையில், நேற்று எகிப்திய ஜனாதிபதி அப்தல் ஃபத்தாஹ் அல்-சிஸி, “காஸாவில் இரண்டு நாள் போர் நிறுத்தத்தை நான் முன்மொழிகிறேன். இந்த இரண்டு நாட்களில், காசாவில் உள்ள 4 இஸ்ரேலிய பணயக்கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்படலாம். அதன் பிறகு, மேலும் அடுத்த 10 நாட்களுக்கு சமரசப் பேச்சு நடத்தலாம்” என்றார்.
ஆனால் இது குறித்து அதிபர் அப்தல் ஃபதா அல்-சிஸி முறைப்படி இஸ்ரேலிய அரசிடமோ அல்லது ஹமாஸுடனோ பேசியாரா இல்லையா என்பதை அது தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், அவரது அழைப்பு முக்கியமானது. இஸ்ரேலின் தாக்குதலில் நேற்று காஸாவில் 53 பேரும், லெபனானில் 21 பேரும் கொல்லப்பட்ட நிலையில் எகிப்து அதிபரின் இந்த அழைப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
காசா மற்றும் லெபனான் மீது ஒரே நாளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்ரேஸ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். வடக்கு காசாவில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் அழிவுகள் அதிகரித்து வருவதாக வருந்திய சூழலில் எகிப்து அதிபர் இரண்டு நாள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல் தனது தாக்குதலை காசாவில் தொடங்கி லெபனான் மற்றும் ஈரான் வரை தொடர்ந்து விரிவடைந்து மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.