வாஷிங்டன்: விண்வெளியில் மனிதர்களை குடியேற்றும் திட்டத்தை செவ்வாயில் இருந்து நிலவுக்கு மாற்றியுள்ளாராம் எலான் மஸ்க்.
விண்வெளியில் மனிதர்கள் குடியேறுவது குறித்து பல்வேறு முறை எலான் மஸ்க் பேசியது உண்டு. அதற்காக அவர் டார்கெட் செய்தது செவ்வாய் கிரகத்தைதான். இந்த சூழலில் இப்போது செவ்வாயில் இருந்து அந்த திட்டத்தை நிலவுக்கு மஸ்க் மாற்றி உள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். “ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவில் நகரம் அமைக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது. இதை 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் சாதிக்க முடியும் என நம்புகிறோம். அதுவே செவ்வாய் கிரகத்தில் இதை செய்ய 20 ஆண்டுகளுக்கும் கூடுதலான காலமாகும். இது குறித்து அறியாதவர்களுக்காக இதை பகிர்கிறேன்.
மேலும், செவ்வாய் கிரகத்தை அடைவதில் உள்ள சவால்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு 26 மாதங்களுக்கும் கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும்போது மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்வது சாத்தியம். ஆனால், ஒவ்வொரு 10 நாட்களுக்கும் நிலவிற்கு ராக்கெட்டைச் செலுத்த முடியும். இருப்பினும் செவ்வாய் கிரகத்தில் நகரம் அமைக்கும் முயற்சியும் நடைபெறும்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ல் மானிடர்களுக்கு நிலவில் பேஸ் (மூன் பேஸ்) இருக்க வேண்டும் என மஸ்க் சொல்லி இருந்தார். அதை கருத்தில் கொண்டே இப்போது அவரது நிறுவனம் நிலவில் நகரத்தை கட்டமைக்கும் பணியில் கவனம் செலுத்தி வருவதாக தகவல். அங்கு பணியை முடித்த பின்னர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அடுத்த பாய்ச்சலாக செவ்வாய் கிரகத்துக்கு தாவலாம்.
மேலும், எதிர்வரும் 2027-ல் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் பணியில் அமெரிக்கா மும்முரமாக உள்ளது. அந்நாட்டு விண்வெளி நிறுவனமான ‘நாசா’-வுடன் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், விண்வெளி சார்ந்து பல்வேறு விஷயங்களில் இணைந்து பணியாற்றி வருகிறது. அதனடிப்படையில் இப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவு சார்ந்த விண்வெளி ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாக நம்பப்படுகிறது.