வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக எலான் மஸ்க் தங்கியதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் பதில் அளித்துள்ளார்.
உலகில் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ்,டெஸ்லா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை ஆதரித்து உள்ளார். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக இருந்து வரும் எலான் மஸ்க் தற்போது அதே பிரச்சினையில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
தொழில் அதிபர் எலான் மஸ்க் தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக பணியாற்றினார் என தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.
அதில் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க் 1995-ம் ஆண்டு ஸ்டான் போர்ட் பல்கலைக்கழக படிப்பை நிறுத்தி விட்டு ஜிப்-2 என்ற நிறுவனத்தில் 4 ஆண்டுகள் வேலை செய்தார். இது தான் அவரது முதல் வேலை. இந்த காலகட்டத்தில் அவர் முறையான அங்கீகாரம் இல்லாமல் பணிபுரிந்து உள்ளார்.
1997-ம் ஆண்டு அமெரிக்காவில் பணி செய்வதற்கான அங்கீகாரத்தை பெற்றார். மாணவர் விசாவில் அவர் அமெரிக்காவில் இருந்தது சட்டவிரோதமாகும் என அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும் போது உலகில் மிகப்பெரிய பணக்காரர் இங்கு ஒரு சட்ட விரோத தொழிலாளியாக மாறினார்.
அவர் மாணவர் விசாவில் வந்த போது பள்ளியில் தான் இருக்க வேண்டும். ஆனால் அவர் பள்ளியில் இல்லை. அவர் சட்டத்தை மீறி உள்ளார் என்று தெரிவித்து உள்ளார்.
எலான் மஸ்க் விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.