மஸ்கட்: ஓமன் வாதி தேக்கா அணை பாசனத்திற்காக வரும் 15-ந்தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமனில் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 75 கி.மீ. தொலைவில் குரையத் பகுதியில் வாதி தேக்கா அணை உள்ளது. சுமார் 246 அடி உயரம் கொண்ட இந்த அணை அரேபிய பகுதியில் கட்டப்பட்ட அணைகளை விட பெரியதாகும்.
இந்த அணை 10 கோடி கன மீட்டர் கொள்ளளவு உடையது. இது அமைந்துள்ள பகுதியில் தகாமர் மற்றும் ஹைல் அல் காப் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இந்த கிராம பகுதிகளில் அதிகமாக விவசாய நிலங்கள் உள்ளது. பெரும்பாலும் அணையின் நீர்பாசனத்தின் மூலம் பல்வேறு பயிர்கள் இங்கு விளைவிக்கப்படுகிறது. எனவே, கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி பாசனத்திற்காக வாதி தேக்கா அணை வருகிற 15-ந் தேதி திறக்கப்படும் என ஓமன் வேளாண்மை, மீன்வளம் மற்றும் நீர்வள அமைச்சகம் அறிவித்துள்ளது.
அணை திறப்பு அறிவிப்பை தொடர்ந்து அந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.