புளோரிடா: மில்டன் சூறாவளியால் புளோரிடா மாகாணத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூறாவளியில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் வீசிய மில்டன் சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் சூறைகாற்றுடன் பலத்த மழையும் பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சூறாவளியில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். புளோரிடா கடற்கரைப் பகுதியில் உள்ள பல படகுத் துறைகளும், ஏராளமான படகுகளும் சேதமடைந்தன.
ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், சுமார் 30 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூறைக் காற்றில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.
இதற்கிடையே, மில்டன் சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்றும், அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி அளித்தார்.