அமெரிக்காவில் இந்து கோவில் மீதான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள பாப்ஸ் அமைப்பால் நிர்வகிக்கப்படும் சுவாமிநாராயண் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த சில மாதங்களில் அமெரிக்காவில் உள்ள இந்து கோவில்கள் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து கோவில்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான செயல்களை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும், உள்ளூர் நிர்வாகம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகமும் இந்த கொடூரமான தாக்குதலை கண்டித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருவதாகவும், தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க உளவுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.