இஸ்ரேல்: ‘தெற்கு லெபனானில் இருந்து வெளியேறுங்கள்’ என்று ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள லித்தானி ஆற்று பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ள படையினரை திரும்ப பெற வேண்டும் என ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இல்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் நிலை இருப்பதாக எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மை காலமாக ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு வருவதாக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் தான் இஸ்ரேல் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
லெபனான் நாட்டில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் படைகள், படிப்படியாக வெளியேறும் என்றும், மீண்டும் ஹிஸ்புல்லா அமைப்பின் மறுகட்டமைப்பை தடுக்கும் வகையில் அந்த நாட்டின் தெற்கு பகுதி பாதுகாப்பினை ராணுவம் உறுதி செய்ய வேண்டும் என்பது தான் போர் நிறுத்த ஒப்பந்தம்.
“லெபனான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்த இஸ்ரேல் உறுதியாக உள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் முதல் நிபந்தனையாக உள்ள தெற்கு லெபனானின் லித்தானி ஆற்று பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பை முழுவதுமாக அகற்றுவது; அந்த நாட்டு ராணுவம் பாதுகாப்பினை உறுதி செய்வது போன்றவை இன்னும் நடக்கவில்லை” என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்படுவதா இல்லையா என்பதை தங்கள் அமைப்பு தான் முடிவு செய்யும் என கடந்த சனிக்கிழமை ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் நீண்ட காலமாக ஹிஸ்புல்லாவை அதன் எல்லைகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது. நாளுக்கு நாள் அது வளர்ந்து பயங்கர ஆயுதக் குழுவாக உருவாகி வருவது இஸ்ரேலுக்கு கவலையளிப்பதாக இருக்கிறது. மேலும், சிரியாவில் அது வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதை இஸ்ரேல் தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகிறது.