த ஹேக் நகரில் நடைபெற்று வரும் நேட்டோ (NATO) மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டபோது, ஈரானை குறிவைத்து கடும் எச்சரிக்கையை விடுத்தார். கடந்த வாரம், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இருநாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது திரும்பத் தாக்கும் ஆபத்துகள் குறித்து அவர் பேசினார்.

ஈரானின் அணு ஆயுதத் திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என நம்புவதாக தெரிவித்த டிரம்ப், “அவர்கள் அதை மீண்டும் தொடங்கினால், அடுத்த தாக்குதல் மிகவும் கடுமையானதாக இருக்கும்,” என்றார். அணு ஆயுதங்களை முற்றிலும் கைவிடும் வரை, எந்தவொரு சமாதானமும் நிரந்தரமாக இருக்காது எனவும் வலியுறுத்தினார்.
நேட்டோ மாநாட்டில் பேசும் போது, “வெறும் போர் நிறுத்தம் போதாது; உறுதியான முடிவுகள் தேவை. அணுசக்தியை முழுவதுமாக கைவிட்டு, சர்வதேச ஒப்பந்தங்களுக்கு இணங்காது என்றால், அவர்களுக்கு எதிராக மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன: கடந்த தாக்குதலுக்கு முன் ஈரான், முக்கியமான யுரேனியம் மற்றும் தொழில்நுட்பங்களை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கலாம். எனவே, ஈரானின் திட்டம் முற்றிலுமாக அழிந்தது என உறுதியாகச் சொல்ல முடியாது. இந்த சூழலில், டிரம்பின் எச்சரிக்கை சர்வதேச வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.