புதுடெல்லி: இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2021-ல் கதி சக்தி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதன்படி ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்ட 16 அமைச்சகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் ரூ.100 லட்சம் கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரிவுபடுத்துவதும், அவற்றை உரிய நேரத்தில் முடிக்காததும் நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில் கதி சக்தி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு திட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் திட்டப்பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணாவது தடுக்கப்படுகிறது. கதி சக்தி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 101 புதிய துறைமுகங்கள் அமைக்கப்படுகின்றன.
200 புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச முதலீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, இந்திய பிரதமர் மோடியின் கதி சக்தி திட்டத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளது.
நிறுவனம் சமீபத்திய அறிக்கையில் கூறியது:-
கடந்த 2024-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக இருந்தது. வரும் 2029ல் இது 6.5 சதவீதமாக உயரும். பிரதமர் நரேந்திர மோடியின் கதி சக்தி திட்டத்தால் இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்கள் முடுக்கிவிடப்படுகின்றன.