நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற கூட்டத்தில், பாகிஸ்தான் இந்தியா மீது குற்றச்சாட்டு வைத்த நிலையில், இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கடுமையாக பதிலடி கொடுத்தார். இந்தியா ஒரு வளர்ந்துவரும் பொருளாதாரம் கொண்ட ஜனநாயக நாடு என்றும், பன்முகத்தன்மையை ஏற்றுக் கொள்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான், பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்காக தனது பொருளாதாரத்தை தவறாக கையாள்கிறது எனவும், சர்வதேச நாணய நிதியத்திடம் தொடர்ச்சியாக கடன் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் ஹரிஷ் குற்றம்சாட்டினார். பயங்கரவாத முகாம்களுக்கு ஆதரவளிப்பது, சர்வதேச ஒழுங்குகளை மீறுவதற்கேற்படும் தண்டனைக்கு உரியது என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் உந்துதலால் அந்த நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டன என்றும், இந்தியா தனது தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யவே இதை செய்ததாகவும் கூறினார்.
ஐ.நா.வில் பெண்கள் முன்னேற்றத்துக்கு இந்தியா முக்கிய பங்காற்றுகிறது என்றும், மோதல்களை அமைதியான வழியில் தீர்க்கும் நோக்கத்துடன், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்காக இந்தியா உறுதியாக செயல்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார். பாகிஸ்தானின் மறைமுக ஆதரவை உலக சமுதாயம் எதிர்க்க வேண்டிய தருணம் இது என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.