டெஹ்ரான்: இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் நீடித்த ராணுவ பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, நாட்டை விலகும் வாய்ப்புகள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையில், “தற்போது ஈரானில் நிலவும் சூழ்நிலை மாற்றத்தை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால், எதிர்கால அபாயங்களைத் தவிர்க்க, வணிக விமானங்கள் மற்றும் படகு சேவைகள் மூலம் நாட்டை விலக வேண்டியது அவசியம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, இந்திய தூதரக அதிகாரிகள் வழங்கும் அனைத்து ஆலோசனைகளையும் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, ஈரானுக்குள் தற்போது புதிதாக பயணம் செய்ய திட்டமிடும் இந்தியர்கள், அத்தியாவசியம் இல்லையெனில் தங்களது பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேற்கு ஆசியா முழுவதும் நிலவும் பதற்றம் காரணமாக, இந்திய அரசு மற்றும் தூதரகங்கள் உயர் பாதுகாப்பு கவனத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானில் இருந்து இந்தியர்கள் வெளியேறும் எண்ணிக்கையும் மெதுவாக அதிகரித்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விரைவாக வெளியேறும் முயற்சிகளை மேற்கொள்வதே பாதுகாப்பான தேர்வாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.