மொரீஷியஸ்: மொரீஷியசில் மருத்துவமனை இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
போர்ட் லுாயிஸ்: மொரீஷியசில், இந்திய நாட்டின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட நவீன மருத்துவமனையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள தீவு நாடான மொரீஷியசுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்றார். பிரதமர் பிரவீன் ஜெகன்னாத் அவரை வரவேற்றார்.
அதன்பின் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கும் சாஹர் திட்டத்தை முன்னெடுத்து செல்வது பற்றியும், ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், மொரீஷியசின் கிராண்ட் பைஸ் என்ற பகுதியில் இந்திய நாட்டின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட மருத்துவமனையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.