ஈரான்-இஸ்ரேல் போருக்குப் பிறகு, அந்த நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ‘ஆபரேஷன் சிந்து’ என்ற மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது. ஜூன் 18 அன்று தொடங்கிய ஆபரேஷன் சிந்துவின் கீழ் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவர்களில் 3,597 பேர் ஈரானிலும் 818 பேர் இஸ்ரேலிலும் மீட்கப்பட்டனர். அவர்கள் 19 சிறப்பு விமானங்களில் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 14 பேர் வெளிநாட்டு இந்தியர்கள். மேலும் 9 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். கூடுதலாக, ஒரு இந்தியரின் ஈரானிய மனைவியும் அழைத்து வரப்பட்டார். மீட்கப்பட்ட இந்தியர்களில் 1,500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 500 குழந்தைகள் அடங்குவர். ஜூன் 20 அன்று இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் ஈரான் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி அளித்ததை அடுத்து, பெரும்பாலான இந்தியர்கள் ஈரானின் மஷாத்திலிருந்து திரும்ப அழைத்து வரப்பட்டனர்.

ஈரானில் இருந்து இந்தியர்கள் அங்கிருந்து ஆர்மீனியா மற்றும் துர்க்மெனிஸ்தானுக்கு அழைத்து வரப்பட்டனர். மீட்பு நடவடிக்கையை தெஹ்ரான், யெரவன் மற்றும் அஷ்காபாத்தில் உள்ள இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைத்தன. இஸ்ரேலில் இருந்து மீட்பு நடவடிக்கை ஜூன் 23 அன்று தொடங்கியது. அவர்கள் அங்கிருந்து ஜோர்டான் மற்றும் எகிப்துக்கு அழைத்து வரப்பட்டனர். மீட்பு நடவடிக்கையை டெல் அவிவ், ரமல்லா, அம்மான் மற்றும் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைத்தன.
வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் இந்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்து, இதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த நடவடிக்கையில் உதவிய ஈரான், இஸ்ரேல், ஜோர்டான், எகிப்து, ஆர்மீனியா மற்றும் துர்க்மெனிஸ்தான் அரசாங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.